Jan 5, 2011

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2


 எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2

** இந்தக் கோப்பிலுள்ள மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசு மடல்கள், ஆணைகளில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் தனியார் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட வேண்டும் என்ற உணர்வு இயல்பாய் அமைதல் வேண்டும். தமிழராய் இருந்தாலும் இல்;லாவிட்டாலும் அரசு, அரசு சார் பணிகளில் உள்ள ஒவ்வொருவரும் அரசாணைக்கு இணங்கத் திருவள்ளுவர் ஆண்டு குறிக்க வேண்டும். எழுத்துப் பணியினர் குறிக்க மறந்தாலும் தட்டச்சிடுவோரும் கணியச்சிடுவோரும் தவறாமல் குறிக்க வேண்டும்.

? திருவள்ளுவர் ஆண்டை எவ்வாறு கணக்கிடுவது?

** திருவள்ளுவர் பிறப்பு கி.மு. 31 என அறுதியிடப் பட்டுள்ளது; எனவே, நடைமுறையில் உள்ள கிருத்துவ ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
 தை முதல் நாள்தான் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்பதால் சனவரித்திங்களில் தைத் திங்கள் முதல் நாள் முதல்தான் இவ்வாறு31 ஆண்டைக் கூட்டிக் கணக்கிட வேண்டும்.சனவரித் திங்களில் மார்கழித் திங்கள் முடிய 30ஐ க் கூட்டினால் போதுமானது. அஃதாவது மார்கழி முடிய முந்தையத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கே தொடரும்.

? தை இரண்டாம் நாள்தானே திருவள்ளுவர் பிறப்பு?

** தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அல்லவா? தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதால் தை இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறோம். 

சித்திரைத் தொடக்கம் தமிழ் ஆண்டுப்பிறப்பு இல்லையா?

** வெவ்வேறு காலக் கட்டங்களில் நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டும் கதிரவனை அடிப்படையாகக் கொண்டும் ஆண்டுப் பகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் காலத்தில் ஆவணித் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கு இருந்துள்ளது. சேர நாட்டில் நிலைத்த இவ்வாண்டுக் கணக்கு மலையாளத்தில் இன்னும் தொடருகிறது.
 பின்பு, தைத் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கும் இருந்துள்ளது. அதற்கடுத்து சித்திரைத் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கும் இருந்து தொடருகின்றது. இக்கணக்கின் அடிப்படையில் சித்திரைத் தொடக்கமும் தமிழ் ஆண்டுப் பிறப்பே. இப்பொழுது நிதியாண்டு, பயிராண்டு, கல்வியாண்டு என உள்ளமைபோல் அப்பொழுதும் வெவ்வேறு வகை ஆண்டுக் கணக்குகள் இருந்துள்ளன. ஆனால் ஆரியர்கள் ஆண்டுப் பிறப்பு என்பதை ஆண்டுத் தொடக்கமாகக் கருதாமல் உயிர்களின் பிறப்பு போன்று கருதியமையால் (ஆண்டு) பிறந்ததாகக் கதை கூறி 60 குழந்தைகள் எனக்கூறி 60 சமசுகிருதப் பெயர்களையும் சூட்டிவிட்டனர்.
இந்த இழிவைப் போக்குவதற்காகத் தமிழ் அறிஞர்களும் ஆன்றோர்களும் - மீண்டும் மீண்டும் வரும் சுழற்சி முறையிலான 60 ஆண்டுகள் கணக்கிற்கு மாறாகத்தொடர் ஆண்டை வலியுறுத்த விழைந்து திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப் படுத்தினர்.

? இதனை யார் முதலில் அறிமுகப்படுத்தியது?

**அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருத்தமற்ற பிரபவ முதல் அம்சம் வரை வழக்கில் உள்ள ஆண்டுகளுக்கு முடிவுகட்டித் தொடர் ஆண்டை அறிமுகப்படுத்த வேண்டும் என விழைந்த தமிழ்ச் சான்றோர் 1921 - ஆம் ஆண்டு தமிழ்க் கடல் மறைமலையடிகள் தலைமையில் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆய்ந்தனர்.
திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதனையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என முடிவெடுத்தனர். தை முதல் தான் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் (எனவும் ஆண்டு இறுதி மார்கழி இறுதி நாள்) எனவும் முடிவெடுத்தனர். அன்று முதல் தமிழ் அன்பர்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாகத் தமிழ் இதழ்களிலும் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெற்று வருகிறது. எனினும் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுமாறு 1971 - இல் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவது நமது வரலாற்றுக் கடமை என உணர்ந்து அனைவரும் அனைத்து நிலைகளிலும் திருவள்ளுவர் ஆண்டையே பின்பற்ற வேண்டும். அரசு, அரசு சார் நிறுவனங்க்ள என்றில்லாமல் தனியார் நிறுவனங்கள் உட்பட அனைவரும் - தமிழ் நாட்டில் உள்ள அனைவரும், உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் - திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும். 

? இவ்வாறு திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவதால் குழப்பம் வராதா?

** நாம்திருவள்ளுவர் ஆண்டை மட்டும் குறிப்பிடுமாறு கூறவில்லை.உலக நடைமுறையில் உள்ள கி.பி.ஆண்டுடன் சேர்த்துக் குறிப்பிடுமாறு கூறுகிறோம். உலகின் பல நாடுகளில் இவ்வாறு பிற ஆண்டைக் குறிப்பிடுவது போன்று, இந்தியாவிலும் நடுவணரசு சக ஆண்டைக் குறிப்பிடகின்றது. கேரளம் கொல்லம் ஆண்டைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற மாநிலங்கள் தத்தம் ஆண்டைக் குறிப்பிடுகையில், மத்திய அரசு வடபகுதி ஆண்டுமுறையைக் குறிப்பிடுகையில் நாம் இவ்வாறு நமக்குரிய ஆண்டு முறையைக் குறிக்காமல் இருப்பதுதான் தவறாகும். சில சமய அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. இவ்வாறு தவறான சமயப் பார்வையில் திருவள்ளுவர் ஆண்டைப் புறக்கணிப்பதும் தவறாகும்.
(தொடரும்)

No comments:

Post a Comment